ரஜினி, கமல் இணைந்தால் எந்த கவலையும் இல்லை.. அதிமுக, திமுக பதில்..

அரசியலில் ரஜினியும், கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரும், திமுக பொருளாளர் துரைமுருகனும் தெரிவித்துள்ளனர்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று(நவ.19) பேட்டி அளித்த போது, ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும், தனித்து நின்றாலும் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. ரஜினி, கமல், விஜய் யாராக இருந்தாலும் அரியணை ஏறும் ஆசை இருக்கும். அதில் தவறில்லை. ஆனால், அவர்களுடைய கொள்கைகளைச் சொல்ல வேண்டும். எங்கள் மீது கல்லெடுத்து அடித்தால், நாங்களும் சரியான பதிலடி கொடுப்போம். அவர்களுக்குத்தான் காயம் ஏற்படும். அவர்கள் அமைதியாக இருந்தால் நாங்களும் அமைதியாக இருப்போம் என்றார்.

அதே போல், திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், இருவரும் சேர்ந்தால் சந்தோஷம். நாங்கள் அதைப் பற்்றி எல்லாம் கவலைப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதுதான் திமுக நிலைப்பாடு. மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தலா, மறைமுக தேர்தலா என்று அரசாங்கம் இது வரை வெளிப்படையாக சொல்லவில்லை என்றார்.

ரஜினியும், கமலும் இணைந்தால் அந்த கூட்டணியில் பல முரண்பாடுகள் ஏற்படும் என்று திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் கருதுகின்றனர். அந்த கூட்டணி, மகாராஷ்டிராவில் இருந்த பாஜக-சிவசேனா கூட்டணி போல்தான் யார் பெரியவர் என்ற போட்டியில் முறிந்து விடும் என்றும் நம்புகின்றனர். அதனால், அந்த கூட்டணி வருவதை மக்களை விட இவர்கள்தான் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்.

More News >>