பிரதமர் மோடியுடன் பவார் சந்திப்பு.. மகாராஷ்டிராவில் கூட்டணி?

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவது குறித்து விரைவில் முடிவு தெரியலாம்.

மகாராஷ்டிராவில் அக்டோபரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், சிவசேனா முதல்வர் பதவி கேட்டதால், கூட்டணி முறிந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்க கடந்த சில நாட்களாக முயன்று வருகிறது. இதற்காக மூன்று கட்சித் தலைவர்களும் பேசி வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாா் 2 முறை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார். ஆனால், சிவசேனாவுடன் அணி சேர சோனியாகாந்தி தயக்கம் காட்டி வந்தார்.

இந்த சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சரத்பவார் இன்று சந்தித்து பேசினார். மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வௌ்ளச் சேதங்களுக்கு நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கேட்பதற்காக சந்திப்பதாக ஏற்கனவே பவார் கூறியிருந்தார். ஆனாலும், இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிரா ஆட்சி குறித்து நிச்சயமாக விவாதிக்கப்பட்டிருக்கும். எனவே, சிவசேனாவை கைவிட்டு விட்டு, பாஜக அரசு அமைய சரத்பவார் ஆதரவு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

More News >>