மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்.. தமிழக அரசு அவசரச்சட்டம்..

மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டங்களை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும் உள்ளன. இவை தவிர, மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு எப்போதும் நேரடி தேர்தல் நடைபெறும். மக்களே நேரடியாக வாக்களிப்பார்கள். ஆனால், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கு அப்படியல்ல. அதிமுக, திமுக கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் நேரடி தேர்தலாகவோ, மறைமுகத் தேர்தலாகவோ மாறி, மாறி நடத்துகிறார்கள். அதனால், இதில் எப்போதும் குழப்பம் காணப்படும்.

கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியில் மேயர் மற்றும் இதர தலைவர் பதவிகளுக்கு மக்களே நேரடியாக வாக்களிக்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டன. அந்த ஆண்டு சென்னை மேயராக ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார். 2001ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்த போதும் மேயராக ஸ்டாலின் வென்றார்.

அப்போது, ஒருவருக்கு ஒரு பதவி என்று உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து ஸ்டாலின் மேயர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், பல நகராட்சி, பேரூராட்சி தலைவர் இடங்களில் திமுக வென்றிருந்தது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் ஒரு கட்சியாகவும், பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஒரு கட்சியாகவும் இருந்ததால் மோதல்கள் ஏற்பட்டன.

 இதையடுத்து, 2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது, மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் கொண்டு வந்து உள்ளாட்சி சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூாட்சி, ஒன்றிய கவுன்சிலர்களே மேயர் மற்றும் தலைவர்களை தேர்வு செய்தனர். துணைமேயர், துணை தலைவர் பதவிகளுக்கும் அதே போல் மறைமுகத் தேர்தல்தான்.

இதன்பின், 2011ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் மேயர் மற்றும் தலைவர்கள் பதவிகளுக்கு மீண்டும் நேரடி தேர்தல் முறை கொண்டு வந்து சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போது 2019ல் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில், மேயர் மற்றும் தலைவர்கள் பதவிகளுக்கு மீண்டும் மறைமுகத் தேர்தல் கொண்டு வந்து அவசரச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.   

உள்ளாட்சி தேர்தல் டிசம்பரில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக அரசு இந்த முடிவை அமைச்சரவையில் மேற்கொண்டு, அவசரச் சட்டங்களை இயற்றியுள்ளது. இதன்படி, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, கவுன்சிலர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். இதேபோல் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

இது குறித்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த அவசர சட்டம், தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (5-வது திருத்தம்) அவசர சட்டம்-2019 என்று அழைக் கப்படும். அதன்படி, மாநகராட்சி மேயரை, சாதாரண முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள், முதல் கூட்டத்தில் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு மேயர் பதவி வகிப்பார். மேலும், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி, நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்களில் ஒருவரை முதல் கூட்டத்தில் நகராட்சி தலைவராக கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், கவுன்சிலர்களில் பெரும்பான்மையினர்  வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மேயர் மற்றும் தலைவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு கிடைப்பது இல்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

சென்னை மாநகராட்சியில் 200 கவுன்சிலர்கள் இடமும், கோவை, மதுரை மாநகராட்சிகளில் தலா 100 கவுன்சிலர்கள் இடமும் உள்ளன. இவை பெரிய மாநகராட்சிகள் என்பதால், இங்கு மக்கள் நலப்பணிகள் அதிகமாக இருக்கும். எனவே இங்கு மாநகராட்சி மன்ற கூட்டங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் நடப்பது அவசியமாகும்.

எனவே மக்கள் நலன் கருதியும், பெரும்பாலான கவுன்சிலர்களின் ஆதரவை கருதியும், மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளை மறைமுகமாக தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>