மகாராஷ்டிரா அரசு அமைப்பதில் நாளை இறுதி முடிவு தெரியும்.. காங்கிரஸ் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது பற்றி நாளை இறுதி முடிவு தெரியலாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் அக்டோபரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று பாஜக மறுத்து விட்டது. மேலும், சிவசேனாவிடம் அப்படி ஒப்புக் கொள்ளவே இல்லை என்றும் அக்கட்சியினர் பொய் சொல்லுகிறார்கள் என்றும் பாஜக கூறியது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்க முயன்று வருகிறது. இதற்காக மூன்று கட்சித் தலைவர்களும் பேசி வருகிறார்கள். ஆனாலும், சிவசேனாவை ஆதரிக்க காங்கிரஸ் தயக்கம் காட்டி வருகிறது. சோனியா இது வரை மவுனம் சாதித்து வருகிறார்.

இந்நிலையில், காங்்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் இன்று(நவ.21) காலையில் கட்சியின் செயற்குழு கூடியது. இதில், மகாராஷ்டிராவில் சிவசேனா அரசை ஆதரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றத்தில் எப்படி செயல்படுவது என்றும் பேசப்பட்டது.

இதன்பிறகு, கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், செய்தியாளர்களிடம் கூறுகையில், மகாராஷ்டிரா நிலைமை குறித்து செயற்குழுவில் விளக்கியுள்ளோம். இன்று இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களிடம் விவாதிக்கப்படும். இதில் ஏற்படும் முடிவைப் பொறுத்து, நாளை மும்பையில் ஒரு இறுதி முடிவு எட்டப்படலாம்என்றார்.

இதே போல், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்றால், பல விஷயங்களை பேசி தீர்மானிக்க வேண்டியுள்ளது. இன்று நாங்கள் மும்பைக்கு செல்கிறோம். தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் விவாதித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்.

More News >>