2021ம் ஆண்டு தேர்தலில் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி ஓங்கிச் சொல்கிறார்
தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என்று ரஜினி மீண்டும் ஓங்கிச் சொல்லியிருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு கலைப் பயணத்தை கொண்டாடும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சி, சென்னையில் நவ.17ம் தேதி நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், எல்லாருடைய வாழ்க்கையிலும் அற்புதங்கள் நடக்கும். 2 ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி, தான் முதலமைச்சர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
ஆனால், அவர் முதலமைச்சரானார். அதற்கு பிறகு, அவருடைய ஆட்சி 20 நாள் தாங்காது, ஒரு மாசம் தாங்காது, மேக்ஸிமம் நாலு மாசம், அஞ்சு மாசத்துல கவிழ்ந்துடும்னு சொல்லாத ஆளே இல்லை. ஆனால், அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. நேற்றும் அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்து கொண்டிருக்கிறது. நாளைக்கும் நடக்கும் என்று கூறினார்.
இதன்பின், மத்திய பாஜக அரசு அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக கோவா திரைப்பட விழாவுக்கு ரஜினி சென்றார். போகும் போது சென்னை விமான நிலையத்தில், மக்கள் மேம்பாட்டுக்காக தேவைப்பட்டால் கமலுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.
இந்நிலையில், கோவாவில் இருந்து இன்று(நவ.21) சென்னை திரும்பிய ரஜினி, வழக்கம் போல் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நான் வாங்கிய விருதுக்கு தமிழக மக்கள்தான் காரணம். அந்த விருதை தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன். கமலுடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் நேரத்தில் அப்போது உள்ள அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு எடுக்க வேண்டிய முடிவு. அப்போது நான் எனது கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி முடிவு அறிவிப்பேன். அதுவரை இது குறித்து நான் பேச விரும்பவில்லை.
வரும் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் நான் கூறிய அதிசயத்தை, அற்புதத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள். மிகப்பெரிய அதிசயத்தை மக்கள் நடத்தி காட்டுவார்கள் என கூறினார்.