சிவசேனாவுடன் இன்று இறுதிகட்ட பேச்சு.. கவர்னருடன் நாளை சந்திப்பு?

மகாராஷ்டிராவில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இன்று இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இன்று மாலை அல்லது நாளையே கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க சிவசேனா உரிமை கோரலாம்.

மகாராஷ்டிராவில் அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றன. ஆனால், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டு பிடிவாதம் பிடித்ததால், ஆட்சியமையவில்லை. கூட்டணியும் முறிந்தது. பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சியமைக்க முன்வரவில்லை. கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி) 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. அதனால், அந்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் இந்துத்துவா கொள்கையுடடைய சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதா என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தயக்கம் காட்டி வந்தார். அதன்பிறகு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 2 முறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், காங்கிரஸ் செயற்குழு கூடி விவாதித்தது.

இதன்பின், டெல்லியில் சரத்பவார் வீட்டில் என்.சி.பி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். இதற்கு பிறகு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறுகையில், மூன்று கட்சிகளுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்ச செயல்திட்டம் அமைத்து ஆட்சியமைப்பதில் பிரச்னை இருக்காது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து மும்பை திரும்பிய சரத்பவாரை அவரது சில்வர் ஓக் இல்லத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்றிரவு சந்தித்து பேசினார். அப்போது உத்தவ் மகன் ஆதித்யா தாக்கரேவும், சஞ்சய் ராவத் எம்.பி.யும் உடனிருந்தனர். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதன்பிறகு உத்தவ் புறப்பட்டு செல்லும் போது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கேட்ட போது அவர் பதிலளிக்காமல் சென்றார்.

என்.சி.பி. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இன்றும்(நவ.22) சிவசேனா தலைவர்களுடனும், காங்கிரஸ் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில், அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் யார், யார் என்பதும், இலாகாக்களும் முடிவு செய்யப்பட்டு விடும். அதைத் தொடர்ந்து இன்று மாலையோ, நாளையோ கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என்றார்.

More News >>