5 ஆண்டுகளுக்கு சிவசேனா முதல்வர்.. சஞ்சய் ராவத் பேட்டி

கூட்டணி ஆட்சியில் ஐந்து ஆண்டுகளுக்கும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றன. ஆனால், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டு பிடிவாதம் பிடித்ததால், ஆட்சியமையவில்லை. கூட்டணியும் முறிந்தது. பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சியமைக்க முன்வரவில்லை. கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.

இதன்பின்னர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயன்று வருகிறது. ஆரம்பத்தில் சிவசேனாவை ஆதரிக்க காங்கிரஸ் தயக்கம் காட்டியது. அதன்பிறகு, சிவசேனா-என்.சி.பி. கூட்டணி ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று காங்கிரஸ் கருதியது. ஆனால், அது நிலையான ஆட்சியாக அமையாது என்று என்.சி.பி. கட்சித் தலைவர் சரத்பவார் நினைத்தார். அதன்பிறகு, அவரது யோசனையை ஏற்று காங்கிரசும் கூட்டணி ஆட்சியில் பங்கேற்க உள்ளது. இது பற்றி நேற்றிரவு சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் சந்தித்து பேசினர்.

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. இன்று(நவ.22) நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ், என்.சி.பி கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. 5 ஆண்டுகளும் சிவசேனாவைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக பதவி வகிப்பார் என்றார். நீங்கள் முதலமைச்சர் ஆவீர்களா?, பவார் உங்களை சிபாரிசு செய்தாராமே? என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர், இல்லவே இல்லை. நாங்கள் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக வேண்டுமென கோரி வருகிறோம் என்றார்.

More News >>