எல்லை பாதுகாப்பு படையில் காஷ்மீர் பெண்கள் சேர்ப்பு..
எல்லை பாதுகாப்பு படைக்கு பெண்கள் சேர்க்கும் தேர்வு முகாம், ஜம்முவில் நடைபெற்றது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆக.5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், இந்த மாநிலத்தை பிரித்து ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
இதில், ஜம்முகாஷ்மீர், புதுச்சேரியைப் போல் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும். சண்டிகரை போல் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது. மேலும், இளைஞர்கள் தீவிரவாதப் பாதைக்கு செல்லாமல் தடுக்கும் வகையில், எல்லை பாதுகாப்பு படையில்(பி.எஸ்.எப்.) அவர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படைக்கு பெண் வீரர்களை தேர்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். எல்லைப் பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், அந்த மாநிலத்திலேயே பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என்று எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.