மோடியின் வெளிநாட்டு டூர்களுக்கு விமானசெலவு மட்டும் ரூ.255 கோடி.. மத்திய அமைச்சர் தகவல்
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதில், விமானச் செலவு மட்டுமே ரூ255 கோடி ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:
பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு தனிவிமானத்தில் செல்கிறார். அந்த விமானச் செலவுகளை மத்திய அரசு ஏற்று கொள்கிறது. கடந்த 2016-17ம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டு டூர்களுக்கு விமானச் செலவு ரூ.76.27 கோடி, 2017-18ல் விமானச் செலவு ரூ.99.32 கோடி, 2018-19ல் விமானச் செலவு ரூ.79.91 கோடி என்று 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.255.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும், 2016-17ல் பிரதமரின் வெளிநாட்டு டூர்களின் போது ஹாட்லைன் செலவு 2 கோடியே 24 லட்சத்து 75,451 ரூபாய். அதுவே 2017-18ல் 58 லட்சத்து 6630 ரூபாய் ஏற்பட்டுள்ளது. பிரதமரின் உள்நாட்டு பயணங்களுக்கு விமானப்படை விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கட்டணம் கிடையாது.
பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை 7 வெளிநாடு டூர் சென்றிருக்கிறார். இந்த டூர்களில் பூடான், பிரான்ஸ், யு.ஏ.இ, பஹ்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, சவுதி, தாய்லாந்து, பிரேசில் ஆகிய 9 நாடுகளுக்கு சென்றிருக்கிறார்.
அமெரிக்காவின் ஹுஸ்டனில் நடத்தப்பட்ட ஹவ்டி மோடி நிகழ்ச்சியை அங்குள்ள டெக்சாஸ் இந்தியா அமைப்புதான் நடத்தியது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஆகஸ்ட் முதல் இது வரை 3 வெளிநாடு டூராக 7 நாடுகளுக்கு சென்றிருக்கிறார். துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு 3 முறைகளில் 6 நாடுகளுக்கு சென்றுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் 13 டிரிப்களில் 16 நாடுகளுக்கும், இணையமைச்சர் முரளிதரன் 10 டிரிப்களில் 16 நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் முரளீதரன் தெரிவித்திருக்கிறார்.