உள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.. முதலமைச்சர் குற்றச்சாட்டு
உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் தொடக்க விழா, தென்காசியில் இன்று(நவ22) காலை நடைபெற்றது.
மாவட்டத்தை தொடங்கி வைத்து, ரூ.100 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது:
தென்காசி மக்கள் மாவட்டத் தலைநகரான நெல்லைக்கு சுமார் 50 கி.மீ.தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால்தான், தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. தாமிரபரணி-நம்பியாறு-கருமேணி ஆறுகள் இணைப்பு திட்டம், அடுத்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி செயல்பாட்டுக்கு வரும். தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசுடன் திமுக கூட்டணி வைத்து ஒரு குடும்பத்தைத்தான் வளர்த்தது. ஆனால், நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்து, 5 மாதத்தில் 6 மருத்துக் கல்லூரிகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
அதேசமயம், மக்களை பாதிக்கக் கூடிய திட்டங்களை எதிர்ப்போம். உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடக்கும்.
இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.