மகாராஷ்டிர மக்கள் முதுகில் குத்தி விட்டார் அஜித்பவார்.. சிவசேனா காட்டம்..

மகாராஷ்டிர மக்கள் முதுகில் குத்தி விட்டார் அஜித்பவார். அவர் மராட்டியத்தையும், சத்ரபதி சிவாஜியையும் அவமதித்து விட்டார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றன. ஆனால், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டு பிடிவாதம் பிடித்ததால், ஆட்சியமையவில்லை. கூட்டணியும் முறிந்தது. கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைக்க கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது. ஆனால், நள்ளிரவில் எல்லாமே மாறி விட்டது. இன்று அதிகாலையில் ராஜ்பவனில் நடந்த விழாவில், பாஜகவின் பட்நாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அவருடன் சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழு தலைவருமான அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அஜித்பவார் அளித்த ஆதரவு கடிதத்தின் அடிப்படையில் பட்நாவிசுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்து விட்டார். ஆனால், அஜித்பவார் எடுத்த முடிவு கட்சியின் முடிவல்ல என்று சரத்பவார் விளக்கம் ெகாடுத்தார்.

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், என்.சி.பி, காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தவருமான சஞ்சய் ராவத் கூறியதாவது:

அஜித்பவார் தனது சித்தப்பா சரத்பவாருக்கு துரோகம் செய்து விட்டார். அது மட்டுமல்ல, அவர் மகாராஷ்டிர மக்களின் முதுகில் குத்தி விட்டார். சத்ரபதி சிவாஜியையும், மராட்டிய மாநிலத்தையும் அசிங்கப்படுத்தி விட்டார். பாஜகவுன் சேர்ந்ததில் சரத்பவாருக்கு எந்த தொடர்பும் இல்ைல. அவர் இன்று காலையில் கூட உத்தவ் தாக்கரேயிடம் பேசினார். விரைவில் இருவரும் பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள்.

இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.

More News >>