பாஜக அரசுக்கு ஆதரவளிக்க அஜித்பவாருக்கு சரத்பவார் ஆசி?

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக அமைந்துள்ள பட்நாவிஸ் அரசுக்கு அஜித்பவார் ஆதரவு அளித்தது, நிச்சயமாக சரத்பவாருக்கு தெரிந்தே நடந்திருக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. பின்னர், முதல்வர் பதவி பிரச்னையில் இந்த கூட்டணி முறிந்தது. கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைக்க கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி நேற்று இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது. ஆனால், நள்ளிரவில் எல்லாமே மாறி விட்டது. இன்று அதிகாலையில் ராஜ்பவனில் நடந்த விழாவில், பாஜகவின் பட்நாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அவருடன் சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக் குழு தலைவருமான அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அஜித்பவார் அளித்த ஆதரவு கடிதத்தின் அடிப்படையில் பட்நாவிசுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்து விட்டார். ஆனால், அஜித்பவார் எடுத்த முடிவு கட்சியின் முடிவல்ல என்று சரத்பவார் விளக்கம் ெகாடுத்தார். மேலும், அஜித்பவாருக்கு என்.சி.பி. கட்சியில் உள்ள 54 உறுப்பினர்களில் 22 பேர் மட்டுமே ஆதரவு அளிப்பதாகவும், சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்து விட்டதாகவும் பேசப்படுகிறது.

இன்னொரு புறம், அஜித்பவார் செயலுக்கு பின்னணியில் சரத்பவாரே இருக்கலாம் என்றும், பழுத்த அரசியல்வாதியான அவரை அவ்வளவு ஈசியாக அஜித்பவார் ஏமாற்றி விட முடியாது என்றும் மகாராஷ்டிர அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

சரத்பவார் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரும் இதையே கூறுகிறார். அவர் கூறியதாவது:

தேர்தலுக்கு முன்பு சிவசேனாவுக்கு தொகுதிகளை குறைத்து கொடுப்பதற்காக பாஜக ஒரு உத்தியை கையாண்டது. அதாவது, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை தருவதாகவும், அதை இப்போது வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் பேசியிருக்கிறது. அதை சிவசேனா நம்பி, 122 சீட் மட்டுமே பெற்றது. ஆனால், தேர்தல் முடிவுக்கு பின்பு முதல்வர் பதவியை தர பாஜக மறுத்து விட்டது. இதில் இருகட்சிகளுக்கும் கசப்புணர்வு ஏற்பட்டு விட்டது.

இதனால், சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், சரத்பவாரை சந்தித்து என்.சி.பி-காங்கிரஸ் ஆதரவை கோரினார். கூட்டணி ஆட்சியமைக்கும் ஆசையில் சரத்பவாரும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால், சிவசேனாவுடன் ைககோர்க்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்பவில்ைல. அவரை பவார் 2 முறை சந்தித்து சமரசம் செய்தார். ஆனாலும், அதற்கு முழு அளவில் சோனியா உடன்படாமல் காங்கிரஸ் செயற்குழுவை கூட்டினார். அதில் கூட்டணி ஆட்சி அமைக்க பலரும் ஒப்புதல் தெரிவித்ததால், சோனியா அமைதியாகி விட்டார்.

ஆனாலும், காங்கிரசை உறுதியாக நம்ப முடியாது என்பதை சரத்பவார் உணர்ந்திருந்தார். மேலும், அவர் மீதும், அஜித்பவார் மீதும் 25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கை மத்்திய அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்திருக்கிறது. சிவசேனாவை ஆட்சியமைக்க விட்டால், பாஜக அந்த கோபத்தை தங்கள் மீது காட்டும் என்பது சரத்பவாருக்கு தெரியும். அதனால், அமலாக்கப்பிரிவு வழக்குகள் இறுக்கப்படும் என்பதும் தெரியும்.

இந்த சூழலில்தான், பாஜகவுடன் கைகோர்க்க சரத்பவார் முடிவு செய்து விட்டார். ஏற்கனவே இது தொடர்பாக அஜித்பவாரிடம் பட்நாவிஸ் ரகசியமாக பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி கேட்பதற்காக பிரதமர் மோடியை சரத்பவார் சந்தித்தார். அப்போதே, பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியமைக்கத்தான் அந்த சந்திப்பு என்று பரவலாக பேசப்பட்டது.

மேலும், பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்தில் பவாரின் என்.சி.பி. கட்சி முறையாக செயல்படுவதாக பாராட்டும் தெரிவித்தார். எனவே, சரத்பவாரின் ஆசியுடன்தான் அஜித்பவார் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது சோனியாவுக்கும் தெரிந்திருக்கும். அவரிடமும் சரத்பவார் தகவலாக சொல்லியிருப்பார். இப்போதைக்கு பாஜகவை பகைத்து கொள்ளாமல் இருப்பதுதான், ஊழல் வழக்குகளின் வேகத்தை குறைக்க உதவும் என்பதை அவரும் உணர்ந்திருப்பார்.

இவ்வாறு அந்த மூத்த தலைவர் தெரிவித்தார்.

More News >>