இனி கூட்டணி தர்மமே அரசியலில் கிடையாது.. விஜயதாரணி பேட்டி..

மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைய அஜித்பவார் ஆதரவு அளித்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, அரசியலில் இனிமேல் கூட்டணி தர்மமே கிடையாது என்றார்.

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவர் அஜித்பவார் ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலை 8 மணிக்கு பதவியேற்றார். அதிகாலையில் நடந்த மகாராஷ்டிர அரசியல் திடீர் திருப்பம் குறித்து, தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கூறியதாவது:

தேர்தலில் எதிரும்புதிருமாக போட்டியிட்ட கட்சிகள் சேருவது சாதாரணமாகி விட்டது. பட்நாவிஸ் அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்துதான் தேர்தலில் சரத்பவார் பிரச்சாரம் செய்தார். இப்போது பாஜக அரசுக்கு அவர்கள் ஆதரவு அளிப்பது மக்களி்ன் நம்பிக்கை இழக்கச் செய்யும். இப்படி ஆட்சியமைப்ப மாநில கட்சிகளின் மீதான நம்பகத்தன்மையை குறைத்து விடும்.

மேலும், தேர்தலில் ஒரு கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்து விட்டு அந்த கட்சியே ஆட்சியமைக்க உதவினால், அரசியலில் இனிமேல் நன்றி, விசுவாசம், கூட்டணி தர்மம் எதுவுமே கிடையாது என்பதைத்தான் காட்டுகிறது. இவ்வாறு விஜயதாரணி தெரிவித்தார்.

More News >>