கட்சி, குடும்பத்தில் பிளவு.. சுப்ரியா சுலே ஸ்டேட்டஸ்...
கட்சி, குடும்பத்தில் பிளவு என்று சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் இன்று அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இதனால், இன்று அதிகாலை முதல் அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. சிவசேனா தலைமையில் என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும் உத்தவ்தாக்கரே முதல்வராவார் என்றம் சரத்பவார் நேற்றுதான் வெளிப்படையாக தெரிவித்திருந்தாார்.
ஆனால், ராத்திரிக்குள் எல்லாமே மாறி விட்டது. அதிகாலையில் பாஜக ஆட்சி அமைந்தது எல்லோருக்குமே ஆச்சரியத்தை அளித்தது. சிவசேனா கட்சியினருக்கு அதிர்ச்சியை அளித்தது. என்.சி.பி. கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், பலருக்கும் அஜித்பவாரின் முடிவு காலையில்தான் தெரிந்திருக்கிறது.
இந்நிலையில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி, தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில், கட்சி, குடும்பம் இரண்டிலும் பிளவு என்று வைத்திருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார் இவ்வளவு காலம் சரத்பவாருக்கு நெருக்கமானவராக இருந்தார். ஆனால், தற்போது சரத்பவாருக்கு எதிராக கட்சியை உடைத்து விட்டார் என்பதால், சுப்ரியா நொந்து ேபாயிருக்கிறார் என்று கூறப்பட்டது.