குழப்பம் ஏற்படுத்த அஜித்பவார் முயற்சி.. சரத்பவார் விளக்கம்
சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்குத் தான் என்.சி.பி. கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. அஜித்பவார் இதில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று சரத்பவார் விளக்கம் கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் நவ.23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார்.
முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் அன்று அதிகாலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, அஜித்பவாரை சட்டசபைக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் நீக்கினார். உத்தவ் தாக்கரேவுடன் இணைந்து பத்திரிகையாளர்களையும் சந்தித்து, சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு என்பதில் மாற்றமில்லை என்றார்.
அதற்கு பின்பும், அஜித்பவார் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் எப்போதும் என்.சி.பி. கட்சியில்தான் இருப்பேன். எங்களுக்கு சரத்பவார்தான் தலைவர். எங்கள் பாஜக-என்.சி.பி. ஆட்சி, மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரும். இந்த ஆட்சி மகாராஷ்டிரா மாநில நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் உறுதியாக செயல்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு என்.சி.பி. கட்சித் தலைவர் சரத்பவார் உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்தார். அவர் வெளியிட்ட பதிவில், பாஜகவுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை. சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து அரசு அமைப்பது என்று என்.சி.பி. கட்சி ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. அஜித்பவாரின் பேச்சு பொய்யானது. மக்களிடையே குழப்பத்தையும், பொய்யான கருத்தையும் ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட பதிவுதான் அது என்று குறிப்பிட்டுள்ளார்.