ஊழல் பட்டியலில் இந்தியாவுக்கு 81வது இடம்: ஆய்வில் தகவல்
புதுடெல்லி: ஜெர்மனியை சேர்ந்த அமைப்பு ஒன்று நடத்திய ஊழல் தொடர்பான ஆய்வுப் பட்டியலில் இந்தியா 81வது இடம் பெற்றுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஒன்று ஊழல் தொடர்பாக ஆய்வு நடத்தியது. உலகளவில் உள்ள நாடுகளில் எந்தெந்த நாடுகளில் அதிகளவில் ஊழல் நடக்கிறது என்றும், ஊழலே இல்லாத நாடுகள் எவை என்பது குறித்தும் இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது. இதற்காக, வல்லுனர்கள், தொழிலதிபர்கள் என பலரிடம் பேட்டி காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊழல் தொடர்பான பட்டியலில் 180 நாடுகள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன. இதில், ஊழல் மிக மிக குறைவாக உள்ள நாடுகள் பட்டியலில் நியூசிலாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைதொடர்ந்து, டென்மார்க், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம் பிடித்துள்ளன.
ஊழல் மிகவும் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் சோமாலியாவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இதில், இந்தியாவுக்கு 81வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.