நீங்க எல்லாம் ஆம்பிளையா.. ஓ.பி.எஸ்.சிடம் கேட்ட குருமூர்த்தி..
அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்க எல்லாம் ஆம்பிளையா? என்று கேட்டேன். அதற்கு பிறகுதான் அவர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்தார் என ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது, அதிமுகவை யாராவது விமர்சித்தால் அவர்கள் கதி அவ்வளவுதான். சுப்பிரமணிய சுவாமி, சென்னாரெட்டி, டி.என்.சேஷன் போன்றவர்கள் எல்லாம் அதிமுக கட்சிக்காரர்களிடம் என்ன பாடுபட்டார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை பலர் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதற்கு பெரிய எதிர்ப்புகள் வருவதில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோற்று, டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார் அல்லவா? அந்த சமயத்தில் தினகரனுக்கு துணை போன 9 பேர் மீது எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் இணைந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். அப்போது, பாஜகவைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி, ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்து 9 மாதம் கழித்துதான் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆண்மை இல்லாதவர்கள்... என்று முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் கேவலமாக விமர்சனம் செய்தார்.
இதற்கு அதிமுகவில் இருந்து பெரிய எதிர்ப்பு வரவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் மட்டும், ஆண்மை இல்லாதவர்கள் அதைபற்றி பேசுவார்கள். இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுவது ஜனநாயகத்தில் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம் என்று சொன்னார்.
இந்நிலையில், திருச்சியில் நேற்று(நவ.24) நடைபெற்ற துக்ளக் பொன்விழாவில் துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கேவலமாக விமர்சித்திருக்கிறார். அவர் பேசியதாவது:
ஜெயலலிதா மறைந்த பிறகு, சசிகலாவை முதலமைச்சராக்க முடிவு செய்தார்கள். அவர் பதவியேற்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டாங்க. சென்னை பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் ஏற்பாடுகள் பண்ணினாங்க. அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்கள் போய் அதை சூப்பர்வைஸ் பண்ணுங்க, அங்க துப்புரவு வேலை எல்லாம் சரியா நடக்கிறதா என்று பாருங்கன்னு சொல்லியிருக்காங்க.
அவர் என்னிடம் வந்து, சார், சசிகலாவை முதலமைச்சராக்கப் பார்க்கிறார்கள். இந்த மாதிரி எல்லாம் பண்ணுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம், நீங்க எல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டேன். நான் ஓ.பி.எஸ்.சிடம் பேசிய முறையை வெளியே சொல்ல முடியாது. அப்ப அவர், சார், நான் என்ன செய்யட்டும்? என்று என்னிடம் கேட்டார். நான் சொன்னேன். நீங்க போய் ஜெயலலிதா சமாதியில போய் உட்காருங்க என்றேன். அதற்கு பிறகுதான், அவர் தியானம் செய்யப் போனார்.இவ்வாறு குருமூர்த்தி பேசினார்.
இப்போதும் அமைச்சர் ஜெயக்குமார் மட்டும், குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், அதிமுக தொண்டர்களிடையே பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. அம்மா மறைந்த பிறகு ஒரு தொண்டர் கூட இல்லாத தலைவர்கள் எல்லாம் இவ்வளவு இழிவாக பேசுகிறார்கள். அதற்கு காரணம், ரஜினி சொன்ன மாதிரி ஆளுமை மிக்க தலைமை இல்லை என்பதுதான். அவர் சொன்னது உண்மைதான் என்று அதிமுகவினர் புலம்புகிறார்கள்.