நான் ஓ.பி.எஸ்.சை சொல்லலே.. ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்..
ஓ.பி.எஸ்.சிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சியில் நேற்று(நவ.24) நடைபெற்ற துக்ளக் பொன்விழாவில் துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கேவலமாக விமர்சித்திருந்தார். அவர் பேசியதாவது:
ஜெயலலிதா மறைந்த பிறகு, சசிகலாவை முதலமைச்சராக்க முடிவு செய்தார்கள். அவர் பதவியேற்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டாங்க. சென்னை பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் ஏற்பாடுகள் பண்ணினாங்க. அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்கள் போய் அதை சூப்பர்வைஸ் பண்ணுங்க, அங்க துப்புரவு வேலை எல்லாம் சரியா நடக்கிறதா என்று பாருங்கன்னு சொல்லியிருக்காங்க.
அவர் என்னிடம் வந்து, சார், சசிகலாவை முதலமைச்சராக்கப் பார்க்கிறார்கள். இந்த மாதிரி எல்லாம் பண்ணுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம், நீங்க எல்லாம் ஒரு ஆம்பிளையா என்று கேட்டேன். நான் ஓ.பி.எஸ்.சிடம் பேசிய முறையை வெளியே சொல்ல முடியாது. அப்ப அவர், சார், நான் என்ன செய்யட்டும்? என்று என்னிடம் கேட்டார். நான் சொன்னேன். நீங்க போய் ஜெயலலிதா சமாதியில போய் உட்காருங்க என்றேன். அதற்கு பிறகுதான், அவர் தியானம் செய்யப் போனார்.இவ்வாறு குருமூர்த்தி பேசினார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மட்டும், குருமூர்த்தி ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார். அவருக்கு நாவடக்கம் தேவை என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும், அதிமுக தொண்டர்களிடையே பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
இந்த நிலையில், தனது பேச்சு பற்றி குருமூர்த்தி, ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளர். அதில் அவர், “ஓ.பி.எஸ்.சிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில்தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை.இதை ஏற்கனவேயே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே, ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசியை எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓ.பி.எஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.
எனவே, முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல், நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து.
இவ்வாறு ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.
அரசியல்வாதிகளை போல் முதலில் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு, பிறகு விளக்கம் கொடுப்பது நல்ல விஷயம்தானோ?