பாஜக பக்கம் போக மாட்டோம்.. 162 எம்.எல்.ஏ.க்கள் சத்தியம்..

 

மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர்.

 மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 56 எம்.எல்.ஏ.க்களை வென்றிருந்த சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டது. தேர்தல் உடன்பாட்டின் போதே இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு தருவதாக பாஜக ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியது.

ஆனால், இதை பாஜக மறுத்தது. 105 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வர் என்று அறிவித்தது. இதை சிவசேனா ஏற்காததால் கூட்டணி முறிந்தது. மெஜாரிட்டிக்கு 145 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், பாஜக ஆட்சியமைக்கவில்லை. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதன்பின், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயன்றது. மூன்று கட்சிகளும் 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று முடிவு செய்தன. இதை கடந்த 22ம் தேதி மாலையில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

 ஆனால், மறுநாள் 23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். என்.சி.பி. கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அதற்கு பிறகு அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கூட்டணியில் மாற்றமில்லை என்றனர். மேலும், என்.சி.பி. கட்சியின் 48 எம்.எல்.ஏ.க்கள் சரத்பவாரிடம் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், கவர்னரின் செயலை எதிர்த்து சிவசேனா, என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ்கன்னா ஆகியோர் நாளை(நவ.25) தீர்ப்பளிப்பதாக கூறியுள்ளனர்.

 

இதற்கிடையே, மும்பையில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஒரு கடிதம் அளித்தனர். அதில் தங்கள் கூட்டணிக்கு 162 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக கூறி, தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

 இதன்பின்னர், மும்பையில் கிரான்ட் ஹயத் நட்சத்திர ஒட்டலில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, என்.சி.பி. தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அசோக் சவான் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில், அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், சமாஜ்வாடி மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் உள்பட 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகினர்.

அவர்கள் அனைவரும் எழுந்து நின்று, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம். எங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்று சத்தியம் செய்தனர். இதன்பின், சரத்பவார் பேசுகையில், பாஜக ஆதரவில் அஜித்பவார் கொடுக்கும் கடிதத்தின் அடிப்படையில் கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ. பதவியை பறித்து விடுவார்களோ என்று யாரும் பயப்படாதீர்கள். நான் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு உறுதி தருகிறேன். பதவியை யாரும் பறிக்க முடியாது என்றார்.

உத்தவ் தாக்கரே பேசும் போது, இதற்கு மேலும் பாஜகவுக்கு துணிவு இருந்தால் இடையூறு செய்து பாருங்கள் என்று சவால் விட்டார். உத்தவ் தாக்கரே தலைமையிலான இந்த கூட்டணிக்கு மகா விகாஸ் அகாடி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், நாளை காலை 10.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியாகிறது.

More News >>