இன்று அரசியல் சட்ட நாள்.. எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
இன்று அரசியல் சட்ட நாள் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிர பிரச்னைக்காக நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்பு சட்டம், கடந்த 1949ம் ஆண்டு ஜனவரி26ம் தேதி அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 26ல் அரசியல் சட்டநாள் கடைபிடிக்கப்படுகிறது. அரசியல் சட்டத்தில் இது வரை 103 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் திருத்தம் 1951ம் ஆண்டில் கொண்டு வந்த போது, மாநிலங்களவை கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று அரசியல் சட்ட நாளை கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம், நாடாளுமன்ற மைய அரங்கில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
அதே சமயம், மகாராஷ்டிராவில் அரசியல் சட்டத்தை மீறி பட்நாவிஸ் அரசு பொறுப்பேற்றுள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை புறக்கணிப்பது என்றும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தை புறக்கணித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு முன்பாக தர்ணா நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.