அ.தி.மு.க.வில் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வந்தது ஏன்?
அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரனின் ஸ்லீப்பர் செல்கள், கட்சிப் பதவிகளுக்கு வந்து விடாமல் தடுப்பதற்குத்தான் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். தொடர்ந்து டிசம்பர் 29-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூடி, சசிகலாவை பொதுச் செயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுத்தது. அதற்கு பின்னர், பாஜக ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னதால், ஓ.பன்னீர்செல்வம் திடீரென ராத்திரியில் ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்தார். இதற்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கப்பட்டார்.
எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி என்று அதிமுக சில மாதங்களை ஓட்டியது. மீண்டும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி, இரு அணிகளும் கைகோர்த்தன. (பிரதமர் சொன்னதால்தான், எடப்பாடிக்கு அடுத்த நிலையில் துணை முதல்வராக ஒப்புக் கொண்டேன் என்று பின்னாளில் ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக பதிவு செய்திருக்கிறார்) அப்போதிருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், எடப்பாடியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கைகளை பிடித்து சேர்த்து வைத்தார்.
அதற்கு பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள். அத்துடன், அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் பதவியே நீக்கப்பட்டது. இதற்காக அ.தி.மு.க. சட்ட திட்ட விதி எண் 43-ல் திருத்தம் செய்யப்பட்டது. பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அளிக்கப்பட்டது.
இதற்கு பின்னர், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம், கொஞ்சமாக ஓ.பி.எஸ். அணியை ஓரங்கட்டினார். ஓ.பி.எஸ்.சுக்கு மத்தியில் முன்பிருந்த செல்வாக்கு குறைந்து விட்டதால், அவரால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஓ.பி.எஸ். விரைவில் பாஜகவில் சேருவார் என்று எடப்பாடி அணியினர் கிளப்பி விட்டனர். அப்போது ஓ.பி.எஸ். அலறியடித்து கொண்டு, நான் இறந்த பிறகு என் மீது அதிமுக கொடிதான் போர்த்தப்படும் என்று அறிக்கை விடும் அளவுக்கு போனார். இந்த காட்சிகள் எல்லாம் நடந்து முடிந்து விட்டாலும், இன்னமும் அதிமுகவில் இரண்டு அணிகள் இருக்கின்றன. ஆட்சி, அதிகாரம், பணபலம் என்ற நூலிழைகளால் அவை கட்டப்பட்டு கிடக்கின்றன.
தற்போது கூடிய அ.தி.மு.க. பொதுக் குழுவில் கட்சியின் சட்டவிதிகளிலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. உள்கட்சி தேர்தலில் போட்டியிட, கட்சியின் அடிப்படை உறுப்பினராக 5 ஆண்டுகள் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று ஒரு திருத்தம் செய்யப்பட்டது.
இதேபோன்ற திருத்தம் 2007-ம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோதே கொண்டு வரப்பட்டது. அப்போது அதை தளர்த்தி பதவி அளிப்பதற்கு ஜெயலலிதாவுக்கு அதிகாரமும் அளிக்கப்பட்டடது. இப்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளுக்கும் தொடர்ந்து 5 ஆண்டுகளாக உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே போட்டியிடமுடியும் என்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் ஏன் கொண்டு வரப்பட்டது என்று அக்கட்சியின் பிரமுகர்களிடம் கேட்ட போது சில தகவல்கள் கிடைத்தன. அவை வருமாறு:
முதல் காரணம்:
வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளது. அப்படி வந்தால், எடப்பாடி பழனிசாமியோ அவரது அணியினரோ அவர் பக்கமாக சாய்ந்து ஓ.பி.எஸ். அணியினரை விரட்டி விட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை ஓ.பி.எஸ். அணியினர் கேட்டதால், சசிகலாவை திருப்பி எந்த பதவிக்கு வரவிட மாட்டோம் என்று உறுதியளிப்பதற்காக எடப்பாடி அணியினர் கொண்டு வந்த திருத்தம். சிறைத் தண்டனை பெற்றவர்கள், தற்காலிகமாக நீக்கப்பட்டு விடுவார்கள் என்பது கட்சியின் விதியில் இருக்கிறதாம். எனவே, சசிகலா மீண்டும் கட்சியில் இணைந்தாலும் 5 ஆண்டு விதியில் அவர் எந்த பதவிக்கும் வர முடியாதாம்.
2வது காரணம் :
சமீப காலமாக டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சியில் இருந்து வரிசையாக பலர் விலகி, அ.தி.மு.க.வில் சேர்ந்து வருகிறார்கள். அவர்கள் கட்சியில் சேர்ந்து விட்டாலும் ரகசியமாக தினகரன் ஆதரவாளர்களாகவே இருப்பார்கள் என்று எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் பயப்படுகிறார்களாம். அதனால், அவர்களை கட்சியில் மாவட்டச் செயலாளர் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் உட்கார வைத்து விட்டால், ஆட்சி முடிந்த பிறகு கட்சி உடைந்தால் தினகரன் மீண்டும் உள்ளே வந்து விடுவார் என்ற அச்சம் இருக்கிறதாம். எனவே, அது போன்ற ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து அவர்களை கட்சிப் பதவிக்கு வரவிடாமல் தடுக்கும் உத்தியே இந்த விதிமாற்றம் என்கின்றனர்.
ஆக, மொத்தத்தில் ஒன்று நிச்சயம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க.வின் ஸ்திரத்தன்மை இப்போது இல்லை என்பதுதான். அதற்கு ஒரே உதாரணம், ஆண்மையற்றவர்கள் என்று ஒரு ஆடிட்டர் போகிற போக்கில் சொன்னதற்கு கூட பெரிய எதிர்ப்பு காட்டாததை சொல்லலாம்.