சிவசேனா, என்சிபி கூட்டணிக்கு தலைவர் இன்று மாலை தேர்வு
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு நாளை கவிழ்ந்தால், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரும். இந்த சூழலில், கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு மும்பையில் நடைபெறுகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 56 எம்.எல்.ஏ.க்களை வென்றிருந்த சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டது. தேர்தல் உடன்பாட்டின் போதே இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு தருவதாக பாஜக ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியது.
ஆனால், இதை பாஜக மறுத்தது. 105 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வர் என்று அறிவித்தது. இதை சிவசேனா ஏற்காததால் கூட்டணி முறிந்தது. இதன்பின், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயன்றது. மூன்று கட்சிகளும் 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று முடிவு செய்தன. இதை கடந்த 22ம் தேதி மாலையில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவித்தார்.
ஆனால், மறுநாள் 23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். என்.சி.பி. கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
அதற்கு பிறகு அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கூட்டணியில் மாற்றமில்லை என்றனர். மேலும், மும்பையில் தங்கள் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளதாக கூறி ஓட்டலில் அணிவகுப்பு நடத்தினர்.
இதற்கிடையே, சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, அம்மாநில சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்கு பட்நாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளது.
இதையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு மும்பையில் சிவசேனா கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், சிவசேனா மட்டுமின்றி, என்.சி.பி, காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் கூட்டணியின் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். அனேகமாக, கூட்டணி தலைவராக சரத்பவாரும், முதலமைச்சர் வேட்பாளராக உத்தவ் தாக்கரேவும் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.