ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான்.. ராகுல்காந்தி விமர்சனம்
கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா சொன்னது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. எஸ்.பி.ஜி. பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று(நவ.27) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின் மீது திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், அரசியல் காரணங்களுக்காக சிறப்பு பாதுகாப்பை விலக்கிக் கொள்ளக் கூடாது. ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பை விலக்கியது தவறு. மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் நாதுராம் கோட்சே, 32 ஆண்டுகளாக காந்தி மீது ஆத்திரம் கொண்டிருந்ததாக கூறியிருந்தார். அவர் தனது விரோதத்தை பல ஆண்டுகளாக வைத்திருந்தார்... என்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, பாஜக உறுப்பினரான சாது பிரக்யா தாக்குர் குறுக்கிட்டு, நீங்கள் ஒரு தேசபக்தரை(நாதுராம் கோட்சே) உதாரணமாக சொல்லக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
காந்தியை சுட்டுக் கொன்றவரை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்திலேயே பாஜக உறுப்பினர் பேசுவதா? என்று எதிர்க்கட்சிகள் கொதித்தெழுந்தன. பாஜக உடனடியாக பிரக்யாவின் கருத்தை கண்டித்தது. மேலும், அவரை பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் இருந்தும் நீக்கியது.
இந்நிலையில், காங்கிஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பயங்கரவாதி பிரக்யா தாக்குர், பயங்கரவாதி ேகாட்சேவை தேசபக்தர் என்று சொல்கிறார். இது இந்திய நாடாளுமன்றத்திற்கு வருத்தமான நாள் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதைத் தான் பிரக்யா தாக்குர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார்.