பிரம்மாண்ட விழாவில் உத்தவ் பதவியேற்பு.. ஸ்டாலின், கமல்நாத் பங்கேற்பு..

மும்பையில் நடந்த பிரம்மாண்ட விழாவில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டதால், கூட்டணி முறிந்தது. பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால் ஆட்சி அமைக்கவில்லை. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன்பின், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து, மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற பெயரில் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தின் 18வது முதலமைச்சராக நேற்று(நவ.28) பதவியேற்றார். மும்பை சிவாஜி பூங்காவில் நடந்த பிரம்மாண்ட விழாவில் அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உத்தவ் தாக்கரேவுடன் 6 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், என்.சி.பி.யைச் சேர்ந்த ஜெயந்த் பாடீல், சஜ்ஜன் புஜ்பால், காங்கிரசைச் சேர்ந்த பாலாசாகேப் தோரட், நிதின் ரவுத் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த விழாவுக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மன்மோகன்சிங் ஆகியோர் வாழ்த்து கடிதம் அனுப்பினர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, காங்கிரசில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், அகமது படேல், கபில்சிபல் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். மேலும், பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், தாக்கரே குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே, பாஜகவுக்கு நெருக்கமான தொழிலதிபர் முகேஷ் அம்பானி, ரீடா அம்பானி ஆகியோர் வருகை தந்தது ஆச்சரியத்தை அளித்தது.

முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, மேடையிலேயே கீழே விழுந்து மக்களிடம் ஆசி பெற்றார். பின்னர், அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜி சிலைக்கு மலர் மரியாதை செய்தார்.

விழாவில் பங்கேற்றவர்களில் சரத்பவார், மனோகர் ஜோஷி, சுசில்குமார் ஷிண்டே, அசோக் சவான், பிருத்விராஜ் சவான், பட்நாவிஸ் ஆகிய 6 பேரும் முன்னாள் முதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>