ரூ.22 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் கொள்ளை.. உ.பி.க்கு போன லாரி மாயம்

மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.22 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென மாயமானது. இதன்பிறகு, வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டு, லாரி மட்டும் ம.பி.யில் கண்டுபிடிக்கப்பட்டது.

நாடு முழுவதும் வெங்காயம் விலை ரூ.100க்கு மேல் உயரே போய் விட்டது. மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயம் பற்றாக்குறை ஏற்படவும் மொத்த வியாபாரிகள், வெங்காயத்தை பதுக்கத் தொடங்கினர். இதனால், வெங்காயத் தட்டுப்பாடு அதிகமாகி விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் வெங்காய மொத்த சந்தையாக விளங்கும் நாசிக்கில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு ஒரு லாரியில் 40 டன் வெங்காயம் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த லாரி மத்தியப்பிரதேசத்தின் வழியாக செல்லும் போது திடீரென மாயமாகி விட்டது.

இதையடுத்து, வெங்காயத்தை அனுப்பிய மொத்த வியாபாரி பிரேம்சந்த் சுக்லா, மத்தியப் பிரதேசத்திற்கு வந்து சிவ்புரி மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்சிங்கிடம் புகார் கொடுத்தார். கடைசியாக, அந்த மாவட்டத்தில் இருந்துதான் லாரி டிரைவர், பிரேம்சந்திற்கு பேசியுள்ளார். எனவே, அங்கு புகார் கொடுத்தார். லாரியில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 40 டன் வெங்காயம் அனுப்பப்பட்டதாக புகாரில் கூறியிருந்தார்.

இந்நிலையில், சிவ்புரி மாவட்டத்தில் தென்டு காவல் நிலைய எல்லைக்குள் ஒரு இடத்தில் அந்த லாரி கண்டுபிடிக்கப்பட்டது. லாரியில் இருந்த 40 டன் வெங்காயமும் கொள்ளை போயிருந்தது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More News >>