மதசார்பற்ற கட்சியாக மாறியது சிவசேனா...
மகாராஷ்டிராவின் புதிய சிவசேனா கூட்டணி அரசு வெளியிட்ட செயல் திட்டத்தில் மதசார்பின்மையை அரசு கடைபிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தீவிர இந்துத்துவா கட்சியாக விளங்கிய சிவசேனாவும், மதசார்பற்ற கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே நேற்று(நவ.28) பதவியேற்றதும், கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டம்(சி.எம்.பி) வெளியிடப்பட்டது. மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ரங்கசாரதா ஓட்டலில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, என்.சி.பி. அமைச்சர் ஜெயந்த் பாடீல், காங்கிரஸ் அமைச்சர் பாலாசாகேப் தோரட் மற்றும் என்.சி.பி மூத்த தலைவர் நவாப் மாலிக் ஆகியோர் வெளியிட்டனர்.
அதில், ஒரு ரூபாய் கிளினிக், 10 ரூபாய் சாப்பாடு தரும் உணவகங்கள் போன்றவை தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், அதில், அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி மதசார்பற்ற கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுவோம். சாதி, மதம், இனத்தின் பெயரால் யாரையும் பாகுபாடு செய்ய மாட்டோம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டேயிடம் நிருபர்கள், இந்துத்துவா கொள்கைகளை சிவசேனா கைவிட்டு விட்டதா? என்று கேட்டனர். அதற்கு அவர், இது பற்றி உத்தவ் தாக்கரே ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார் என்றார். தொடர்ந்து நிருபர்கள், சிவசேனா மதசார்பற்ற கட்சியாக மாறி விட்டதா? என்று கேட்டதற்கு, என்.சி.பி. தலைவர் நவாப் மாலிக் குறுக்கிட்டு, மதசார்பற்ற ெகாள்கை என்பது ஒவ்வொருவரும் அவரவர் மதத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கைகளை மதிப்பதுதான் என்று பதிலளித்தார்.
ஏற்கனவே அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியான சமயத்தில், உத்தவ் தாக்கரே தாம் அயோத்திக்கு செல்லவிருப்பதாக அறிவித்திருந்தார். பின்னர், அந்த பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.