கிரிமினல் வழக்கு மறைப்பு.. தேவேந்திர பட்நாவிசுக்கு நாக்பூர் போலீஸ் சம்மன்..

தேர்தலில் வேட்புமனுவில் தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கில் தேவேந்திர பட்நாவிசுக்கு நாக்பூர் போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசுக்கு மெஜாரிட்டி இல்லாததால், அவர் ராஜினாமா செய்தார். உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அங்கு அமைந்துள்ளது. முதலமைச்சராக உத்தவ் நேற்றுதான் பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், நாக்பூர் போலீசார் முன்னாள் முதல்வர் பட்நாவிசுக்கு பழைய வழக்கில் சம்மன் கொடுத்துள்ளனர். பட்நாவிஸ் கடந்த 1996, 1998ம் ஆண்டு தேர்தல்களின் போது வேட்புமனுவில் தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை மறைத்து விட்டார் என்று குற்றச்சாட்டு உள்ளது. அவர் தன் மீதான மோசடி வழக்குகளை மறைத்ததால், அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சதீஷ் உகே என்ற வழக்கறிஞர், நாக்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை மாஜிஸ்திரேட் நீதிமன்றமும், பின்னர் ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தன.

இதன்பின்னர், வழக்கறிஞர் சதீஷ் உகே, சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார். சுப்ரீம் கோர்ட் மனுவை விசாரித்து, பட்நாவிஸ் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று நாக்பூர் மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த நவம்பர் 1ம் தேதியன்று, மாஜிஸ்திரேட் மீண்டும் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றார். இதைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 125-ன் கீழ் பட்நாவிசுக்கு சம்மன் அனுப்புமாறு நாக்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதன்படி, நாக்பூர் போலீசார் நேற்று (அக்.28) நாக்பூரில் உள்ள பட்நாவிஸ் இல்லத்திற்கு சென்று மாஜிஸ்திரேட் நீதிமன்ற சம்மனை அளித்து விட்டு சென்றனர். சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவியேற்ற நாளில், பட்நாவிசுக்கு போலீஸ் சம்மன் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>