ஜார்க்கண்டில் தேர்தல்.. குண்டுவைத்து பாலம் தகர்ப்பு..

ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், மாேவாயிஸ்ட் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து ஒரு பாலத்தை தகர்த்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு இன்று முதல் டிசம்பர் 20ம் தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இன்று முதல் கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 5 பெண்கள் உள்பட 189 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3906 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், கும்லா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர். எனினும், அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்்படவில்லை. அதே போல், வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுவதாகவும், அதில் பாதிப்பு இல்லை என்றும் மாவட்ட எஸ்.பி. சசிரஞ்சன் தெரிவித்தார்.

ஜார்க்கண்டில் ஆளும் பாஜக முதல் முறையாக தனித்து போட்டியிடுகிறது. ஜே.எம்.எம் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் உள்ளன.

More News >>