மகாராஷ்டிர சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு..
மகாராஷ்டிரா சட்டசபையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது.
மகாராஷ்டிராவில் ஒரு மாத கால அரசியல் நெருக்கடிகள் தீர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற இந்த கூட்டணியின் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.
உத்தவ் தாக்கரே அரசு டிசம்பர் 2ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனால், இன்றே சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது.
சட்டசபையில் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள திலில் வல்சே, குரல் வாக்கெடுப்பு நடத்துகிறார். தங்களுக்கு மொத்தம் உள்ள 288ல் 170 பேர் ஆதரவு உள்ளதாக சிவசேனா தெரிவித்திருக்கிறது.
உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபித்ததும் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும். ஏற்கனவே கூட்டணியில் போட்டுள்ள ஒப்பந்தப்படி, சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, சரத்பவாரின் என்.சி.பி.க்கு துணை முதல்வர், துணை சபாநாயகர் பதவிகள், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி என்று பிரிக்கப்பட்டுள்ளதாக அஜித்பவார் கூறியிருக்கிறார். எனவே, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அஜித்பவார் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம்.
இதைத் தொடர்ந்து, சட்டசபையில் கவர்னர் கோஷ்யாரி உரை நிகழ்த்துவார். தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.