மகாராஷ்டிராவில் காங்கிரஸ் சபாநாயகர்..
மகாராஷ்டிரா சட்டசபையில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த நானா படோலே தேர்வு செய்யப்படுகிறார்.
மகாராஷ்டிராவில் ஒரு மாத கால அரசியல் நெருக்கடிகள் தீர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர விகாஸ் முன்னணி என்ற இந்த கூட்டணியின் சார்பில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார்.
உத்தவ் தாக்கரே அரசு டிசம்பர் 2ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனால், இன்றே சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபித்ததும் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும். ஏற்கனவே கூட்டணியில் போட்டுள்ள ஒப்பந்தப்படி, சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, சரத்பவாரின் என்.சி.பி.க்கு துணை முதல்வர், துணை சபாநாயகர் பதவிகள், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவி என்று பிரிக்கப்பட்டுள்ளதாக அஜித்பவார் கூறியிருக்கிறார். எனவே, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அஜித்பவார் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம்.
இதற்கிடையே, காங்கிரசின் சார்பில் சபாநாயகர் வேட்பாளராக நானா படோலே அறிவிக்கப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சியான பாஜக, வேட்பாளரை நிறுத்தாவிட்டால், சபாநாயகராக நானா படோலே ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார். போட்டி இருந்தாலும் சட்டசபையில் மெஜாரிட்டி உள்ளதால், படோலே சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். தொடர்ந்து, துணை சபாநாயகராக என்.சி.பி. கட்சியைச் சேர்ந்தவர் தேர்ந்ெதடுக்கப்படுவார்.