மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து 15 பேர் பலி..
மேட்டுப்பாளையம் அருகே இன்று(டிச.2) அதிகாலையில் 4 வீடுகள் இடிந்து விழுந்து 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சிலரை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏ.டி.காலனியில் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அந்த காலனியில் வரிசையாக ஓட்டு வீடுகள் உள்ளன. இன்று அதிகாலை 5 மணிக்கு மழை பெய்து கொண்டிருந்த போது, சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
சுற்றுச்சுவர் விழுந்ததில் 4 வீடுகளும் இடிந்து விழுந்தன. அந்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தூக்கத்தில் இருந்ததால் அவர்கள் மூச்சுதிணறி உயிருக்கு போராடியுள்ளனர். வீடுகள் இடிந்த தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் இடிபாடுகளை அகற்றப்பட்டது. அப்போது 2 பெண்கள் உள்பட 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், 10 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் வரை உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.