அண்டி பிழைக்கும்.. . அரசகுமார் மீது பாஜக கடும் பாய்ச்சல்
யாரையும் புகழ்ந்து பேசி அண்டி பிழைக்கும் நிலை உண்மையான பாஜக தொண்டனுக்கு இல்லை என்று ஸ்டாலினை புகழ்ந்த பி.டி.அரசகுமாரை பாஜக மறைமுகமாக விமர்சித்துள்ளது.
புதுக்கோட்டையில் நேற்று(டிச.1) திமுக பிரமுகர் பெரியண்ணன் இல்லத் திருமண விழா நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார். இதில், பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி.அரசக்குமார் கலந்து கொண்டு பேசும் போது, உள்ளாட்சிகளில் நல்லாட்சி கொடுத்து நாயகனாக வீற்றிருக்கும் என்றைக்கும் எங்களுக்கும் நிரந்த தலைவராக உள்ள அன்புத் தளபதியே... என்று ஸ்டாலினை புகழ்ந்தார்.
மேலும், எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின். அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகி இருக்க முடியும். ஆனால் அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். ஸ்டாலின் முதலமைச்சராகும் காலம் கட்டாயம் வரும் என பேசினார்.
இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. மேலும், அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்பது பாஜகவினருக்கே தெரிந்து விட்டது என்று திமுகவினர் பேசினர். இதைத் தொடர்ந்து, பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமார் நேற்றிரவே அவசரமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், நான் யதார்த்தமான முறையில் ஜனநாயக முறையில் திமுக தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார் என்றேன். இதில் ஏதும் பாஜகவின் குரலாகவோ, பாஜகவின் வார்த்தைகளால் நான் வெளியிடவில்லை.
பாஜகவின் துணைத் தலைவராக நான் இருக்கும் போது, எப்படி திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்லுவேன்? என்று சப்பைக்கட்டு கட்டி நீண்ட விளக்கம் கொடுத்தார்.
ஆனாலும், பாஜகவினருக்கு மனம் ஆறவில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களை எளிதில் பாஜக புகழ் பாடவே வைத்து விடலாம். ஆனால், திமுகவையும், ஸ்டாலினையும் தேர்தலில் வீழ்த்துவது கடினம் என்பதால், பாஜகவினர் ஆள் வைத்து ஸ்டாலினை சுடலை என்றும், கைப்புள்ளை என்றும் கேவலப்படுத்தி மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். அதே போல், ஸ்டாலினை வசைபாடுவதற்காகவே சிலரை வைத்து யூ டியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஸ்டாலின் முதல்வராவார் என்று ஒருவர் பேசினாலும், சொந்த கட்சியின் துணை தலைவரே பேசினால் எப்படி பொறுப்பார்கள்?
பாஜகவினர் சமூக ஊடகங்களில் அரசுகுமாரை கரித்து கொட்டினர். மேலும், அவரை கடுமையாக திட்டி தீர்த்தனர். தமிழ்நாடு பாஜக ட்விட்டர் பக்கத்தில், யாரையும் புகழ்ந்து பேசி அண்டி பிழைக்கும் நிலை உண்மையான பாஜக தொண்டனுக்கு இல்லை. ஆண்டிகள் கூடி தேர் இழுத்தாலும் கைப்புள்ளை வேண்டுமானால் சர்வாதிகாரி ஆகலாம். கனவில் கூட என்றும் அரசனாக முடியாது. அன்றும், இன்றும் என்றும் நரேந்திரமோடிதான் கடைக்கோடி தொண்டனுக்கும் இதயதெய்வம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.