பிரதமர் மோடி வருகையால் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: நாளை நடைபெறவுள்ள அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதால் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நாளை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பயனாளிகளுக்கு நாளை நடைபெறவுள்ள அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா நாளை, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மானிய விலையில் கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக, மோடி நாளை பிற்பகல் சென்னை வருகிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் மோடி அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் விமான படை தளத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்குகிறார். பின்னர், கார் மூலம் கலைவாணர் அரங்கிற்கு சென்று விழாவில் கலந்து கொள்கிறார்.இந்த விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

இதனால், சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 10 கம்பனி சிறப்பு போலீஸ் படையினரும் கண்காணித்து வருகிறார்கள்.

விழா முடிந்த பிறகு, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்லும் மோடி இரவு தங்கிவிட்டு பின்னர் அடுத்த நாள் காலை அங்கிருந்து புதுச்சேரிக்கு செல்கிறார். இங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் மோடி கலந்துக் கொள்ள இருப்பதால் புதுச்சேரியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

More News >>