விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவிய மதுரை இன்ஜினீயர்..

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர், நிலவில் மோதிய பகுதிைய நாசாவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்த படங்களை ஆய்வு செய்து, லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க நாசாவுக்கு மதுரை இன்ஜினீயர் உதவியிருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த இளைஞர் சண்முக சுப்பிரமணியன், சென்னையில் தனியார் கம்ப்யூட்டர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், விண்வெளி தொடர்பான விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டு ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். இவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்ட இரு புகைப்படங்களை ஆய்வு செய்திருக்கிறார்.

நிலவை சுற்றி வரும் அமெரிக்காவின் எல்.ஆர்.ஓ. செயற்கைக்கோள், கடந்த ஜூலை 16, செப்.17 ஆகிய தேதிகளில் நிலவின் மேற்பரப்பில் எடுத்த படங்களை நாசா வெளியிட்டது. இந்தியாவின் சந்திரயான்2 மூலம் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் இறங்கும் போது வேகமாக மோதியதால் சிதறி விட்டது. நிலவில் அது இறங்குவதற்கான பகுதியைத்தான் எல்.ஆர்.ஓ படம் எடுத்து, அதைத்தான் நாசா வெளியிட்டது.

அடுத்தடுத்து அந்த படங்களை வைத்து ஆய்வு நடத்திய சண்முக சுப்பிரமணியன், இரண்டாவது படத்தில் நிலவின் மேற்பரப்பில் சில நுண்ணிய மாற்றங்கள் உள்ளதை கண்டுபிடித்தார். அதை அவர் அக்.30ம் தேதி ட்விட்டரில் வெளியிட்டார். புதியதாக தெரிந்த புள்ளிகள், விக்ரம் லேண்டரின் சிதறல்களாக இருக்கும் என்று குறிப்பிட்டு நாசாவுக்கு இமெயிலில் தகவல் அனுப்பினார்.

அதை பரிசீலித்த நாசா விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டதில், அது உண்மை என்று கண்டறிந்தனர். இதையடுத்து, நாசாவில் எல்.ஆர்.ஓ. திட்டத்தின் துணை இயக்குனரான ஜான் கெல்லர் என்ற விஞ்ஞானி இமெயில் மூலம் சண்முக சுப்பிரமணியனுக்கு பாராட்டு தெரிவித்தார். சண்முக சுப்பிரமணியன் தகவலைக் கொண்டு விக்ரம் லேண்டரின் பாகங்களை நாசா உறுதிப்படுத்தியுள்ளதாக அதில் கூறியிருக்கிறார்.

இந்த இமெயில் நகலை தனது ட்விட்டர் பக்கத்தில் சண்முக சுப்பிரமணியன் வெளியிட்டிருக்கிறார். இதையடுத்து, சமூக ஊடகங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

More News >>