குறைந்த காற்றழுத்த தாழ்வு நாளை வரை மழை நீடிக்கும்..

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடருவதால், நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று(டிச.3) காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை- தமிழக கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று, தமிழகம் மற்றும் புதுவையில பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ. மழையும், ராமநாதபுரத்தில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கன்னியாகுமரி கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசலாம். இது 50 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் அந்த கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 42 செ.மீ. அளவுக்கு வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட 13 சதவீதம் அதிகமாகும்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

More News >>