தணிக்கை அதிகாரிகளுடன் இருட்டு பட டைரக்டர் வாக்குவாதம்... சென்சார் அலுவலகத்தில் பரபரப்பு..

சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாக்‌ஷி நடிக்கும் படம் இருட்டு. இப்படத்தை வி.இசட்.துரை டைரக்டு செய்திருக்கிறார். இதில் விமலா ராமன், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இஸ்லாமியர் நம்பும் ஜின் என்ற பிறவியை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. திகில் கலந்த துப்பறியும் கதையான இப்படம் தணிக்கை சான்றிதழுக்காக அதிகாரிகளுக்கு திரையிடப் பட்டது.  படத்தை பார்த்த அதிகாரிகள் படத்தில் திகிலூட்டும் காட்சிகள் நிறைய இருக்கிறது.   அதை பாதியாக குறைக்க வேண்டும், மேலும் பாடல் காட்சியில் மிகவும் நெருக்கமான காட்சிகள் இருக்கிறது. அதையும் குறைக்க வேண்டும், இஸ்லாமியர்கள் நம்பும் ஜின் பற்றிய கதையாக இருப்பதால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அடுக்கடுக்காக வாதங்கள் வைத்ததுடன் படத்துக்கு ஏ சான்றிதழ்தான் வழங்க முடியும் என்றனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இயக்குனர் படத்துக்கு யூ/ஏ சான்று கேட்டு வாதம் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் இயக்குனர் கூறியதை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். பின்னர் குறிப்பிட்ட காட்சிகளை சென்சார் செய்ய இயக்குனர் சம்மதித்தார். இதுகுறித்து இயக்குனர் துரை கூறும்போது,   இருட்டு படத்துக்கு யூ/ஏ சான்று வாங்குவதற்குள் சென்சார் அதிகாரிகளுடன்  பெரிய வாக்குவாதமே செய்ய வேண்டி இருந்தது. உலக அளவில் வரும் திகில் படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள். யாரும் பயந்தது போல் தெரியவில்லை. அப்படியிருக்க இப்படம் எப்படி ரசிகர்களை பயமுறுத்தும் என்று அதிகாரிகளை கேட்டதுடன்,  இஸ்ஸாமியத்தில் நம்பும் ஜின் எனப்படும் ஒரு பிறப்பை வைத்து கதை உருவாக்கியதற் காக ஏதாவது பிரச்னை வந்தால் நானே பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக கடிதம் எழுதி தந்தேன். ஜின் பற்றி தவறாக எதுவும் படத்தில் காட்டவில்லை. சுமார் 20 காட்சிகள் வெட்டப் பட்டு அதன்பிறகே யூ/ஏ சான்றிதழ் தரப் பட்டது. தணிக்கை முறையால் சொல்ல வந்த கருத்தை வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனால்தான் வெப் சீரியல் இயக்க வும் முடிவு செய்திருக்கிறேன். அதற்கு தணிக்கை கிடையாது. வெளிப்படையாக கருத்துக்களை எடுத்து வைப்பேன்.   இதற்கிடையில்  சிம்பு நடிக்கும் புதிய படம் இயக்க உள்ளேன். வரும் பிப்ரவரி மாதம் இதன் தொடக்க விழா நடக்கும். சிம்புவை வைத்து தொட்டி ஜெயா 2ம் பாகமும் எடுக்க உள்ளேன். நிச்சயம் வரும்   இவ்வாறு வி.இசட்.துரை கூறினார்.
More News >>