ரஜினியை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.. 169 படத்தில் இணைகிறாரா?
By Chandru
சந்தீப் கிஷன் நடித்த மாநகரம் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அடுத்து மன்சூர் அலிகான் நடிப்பதற்காக லாரியை மையமாக வைத்து ஒரு ஸ்கிரிப்ட் உருவாக்கினார்.
அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது கதை நன்றாக இருக்கிறது கார்த்தியை வைத்து எடுக்கலாம் என்று சொல்ல அது கைதி படமாக உருவானது. தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது. இதற்கிடையில் யாரும் எதிர்பாராத விதமாக விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது. அதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் முடிந்து 3வது கட்டமாக கர்நாடகாவில் சிமோகா சிறையில் நடக்கிறது.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினியிடமிருந்து லோகேஷுக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று போயஸ்கார்டன் சென்று ரஜினியை சந்தித்தார். அப்போது கைதி வெற்றிக்கு வாழ்த்து கூறியதுடன் தளபதி 64 பட வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தார். சிறிதுநேரம் அவருடன் கலந்துரையாடிவிட்டு லோகேஷ் புறப்பட்டு சென்றார்.
ரஜினி தற்போது 168 படம் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தை தொடர்ந்து ரஜினியின் 169வது படத்தை லோகேஷ் இயக்க வாய்ப்பிருப்பதாக இந்த சந்திப்பையடுத்து தகவல் பரவி வருகிறது.