ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு..

நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளிக்கிறது.  

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அமலாக்கத் துறையும் தனியே வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

 இதன்பின்னர், அவரது ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. இதன்பின், சுப்ரீம் கோர்ட்டில் அவருக்கு சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பாக அமலாக்கத் துறை வழக்கில் அவரை கைது செய்து விட்டனர். அதனால், அவர் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வருகிறார்.

சிதம்பரம் கைதாகி 100 நாட்களாகி விட்டன. இந்நிலையில், அவரது ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. மனுவை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா கடுமையாக வாதாடினார். மேலும், சீலிட்ட கவரில் சிதம்பரம் தொடர்பான வங்கிக் கணக்குகள், வெளிநாட்டு சொத்துகள் பற்றிய விவரங்களை அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, எச்.ராய் ஆகியோர் தீர்ப்பை தள்ளி வைத்தனர். இந்நிலையில், சிதம்பரம் ஜாமீன் மனு மீது நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளனர்.  

More News >>