உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு.. முஸ்லீம் லீக் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்ததால், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாய்த்து என உள்ளாட்சி அமைப்புகள் சீர் குலைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆளும்கட்சி தயாராக இல்லாத காரணத்தால் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை தேதி அறிவிக்காமல் தொடர்ந்து கால தாமதம் செய்து வந்தது.
தற்போது, பல்வேறு குளறுபடிகளுடன் கிராம பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்த தேர்தலும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு கட்டமாக நடத்தப்படும் எனவும், இதில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிக்கான தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என விந்தையான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. கிராமபுறங்களில் முதலில் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும்கட்சி தனது அதிகார பலத்தை கொண்டு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட அதிக வாய்ப்பை மாநில தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
நகரபுறங்களில் உள்ள ஆளும்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரை கிராமபுறங்களில் நடைபெறவுள்ள தேர்தல் பகுதிகளில் தங்க வைத்து முறைகேடு செய்ய ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலை நேரடியாக எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், இப்படி விசித்திரமான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு ஆளும் கட்சியின் கைப்பாவை என்பதை மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் நிரூபித்துள்ளது.
எது எப்படி இருந்தாலும் மக்களை சந்தித்து அவர்களது ஆதரவை பெற தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்றுமே தயாராக உள்ளது. நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தனது முழுமையான ஆதரவை தமிழ்நாடு முஸ்லிம் லீக் தெரிவித்து கொள்வதோடு, உள்ளாட்சி தேர்தலில் போட்டயிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரித்து, வெற்றி பெற பாடுபாடுவோம்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.