சந்திரயான் விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்து விட்டோம்.. இஸ்ரோ தலைவர் பேட்டி

நாசாவுக்கு முன்பே, சந்திரயான் ஆர்பிட்டரே நிலவில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருக்கிறார்.

நிலவின் தெற்கு பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), கடந்த ஆகஸ்டில் விண்ணுக்கு அனுப்பியது. புவிவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, செப்டம்பர் 2ம் தேதியன்று நிலவின் வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டது.

அதன்பின், நிலவில் இறங்கி ஆய்வு மேற் கொள்வதற்கான விக்ரம் லேண்டர், சந்திரயானில் இருந்து பிரித்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவில் இருந்து 2.1 கி.மீ. தூரத்தில் லேண்டர் சுற்றிக் கொண்டிருந்த வரை இஸ்ரோ கட்டுப்பாட்டறையுடன் தொடர்பில் இருந்தது. அதன்பின், லேண்டர் நிலவில் இறங்கும் போது அதன் தொடர்பு துண்டித்து போய் விட்டது. நிலவில் லேண்டர் மெதுவாக இறங்குவதற்கு பதிலாக மிக வேகமாக இறங்கியதால் நிலவின் மேற்பரப்பில் கடுமையாக மோதி சிதறியிருக்கலாம் என கூறப்பட்டது.

அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவின் உதவி கோரப்பட்டது. நாசா ஏற்கனவே எல்ஆர்ஓ என்ற செயற்கைக்கோளை நிலவை சுற்றி வரச் செய்திருக்கிறது. அதன் கேமராக்கள், நமது விக்ரம் லேண்டர் இறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இடத்திற்கு நேராக செல்லும் போது படங்களை எடுத்து அனுப்பின. ஆனாலும், அதில் லேண்டரின் பாகங்கள் எதுவும் தெரியவில்லை என்று நாசா கூறியிருந்தது.

கடந்த 2 நாளைக்கு முன்பு, நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் மோதிய பகுதியை காட்டும் படத்தை வெளியிட்டது. மேலும், அதில் லேண்டரின் பாகங்கள் உடைந்து சிதறி கிடப்பதையும் சுட்டிக் காட்டியது.

மேலும், சென்னையில் பணியாற்றும் மதுரை கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன், ஏற்கனவே நாசா வெளியிட்ட படங்களை ஆய்வு செய்து அதில் விக்ரம் லேண்டர் பகுதிகள் தெரிவதாக இமெயிலில் நாசாவுக்கு தகவல் கொடுத்தார். அதை நாசா ஏற்று கொண்டது. விக்ரம் லேண்டரின் பாகங்கள் அவை என்பதை உறுதி செய்ய அவரது தகவல் உதவியாகவும் நாசா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் கே.சிவன் இன்று ஏ.என்.ஐ. ஏஜென்சிக்க அளித்த பேட்டியில், இஸ்ரோவின் ஆர்பிட்டரே ஏற்கனவே விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்தை கண்டுபிடித்து விட்டது. அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம் என்று ஏற்கனவே இஸ்ரோ இணையதளத்தில் தெரிவித்திருக்கிறோம். அதை நீங்கள் பார்க்கலாம் என்றார்.

இஸ்ரோ இணையதளத்தில் கடந்த செப்.10ம் தேதியே, விக்ரம் லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் கண்டுபிடித்து விட்டது. அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

More News >>