மக்களவை, சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி ஒதுக்கீடு.. 10 ஆண்டுக்கு நீட்டிப்பு
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டசபை தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோர்(எஸ்.சி) மற்றும் பழங்குடியினருக்கென (எஸ்.டி) தனி தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த தொகுதிகளில் அந்த பிரிவினர் மட்டுமே போட்டியிட முடியும். இதற்கு அரசியல் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
எனினும், அரசியல் சட்டத்தில் குறிப்பிட்ட காலம் வரைதான் இந்த இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன்பின்பு, எஸ்சி, எஸ்டி மக்கள் நலன் கருதி தொடர்ந்து இந்த ஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த ஒதுக்கீடு அடுத்த மாதம்(ஜனவரி) 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி தெரிவித்துள்ளது.