திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை.. ராஜ்யசபாவுக்கு வருகிறார்
அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து ப.சிதம்பரம், திகார் சிறையில் இருந்து நேற்று(டிச.4) இரவில் விடுதலையானார். இன்று அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அமலாக்கத் துறையும் தனியே வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன்பின்னர், அவரது ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. இதன்பின், சுப்ரீம் கோர்ட்டில் அவருக்கு சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பாக அமலாக்கத் துறை வழக்கில் அவரை கைது செய்து விட்டனர். அதனால், அவர் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வருகிறார்.
சிதம்பரம் கைதாகி 105 நாட்கள் ஆகி விட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கேட்டு சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதன் மீது நீண்ட வாதங்களுக்கு பிறகு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இன்று அந்த மனுவின் மீது நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, எச்.ராய் ஆகியோர் தீர்ப்பளித்தனர். இதில், சிதம்பரத்திற்கு ரூ.2 லட்சத்திற்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனிலும் விடுவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. மேலும், நீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ கூடாது என்றும், வழக்கு பற்றி பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்து ஜாமீன் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு 8 மணிக்கு திகார் சிறையில் இருந்து சிதம்பரம் விடுதலை செய்யப்பட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் திரளாக திரண்டு அவரை வரவேற்றனர். அங்கு ஏராளமான செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பேட்டி கேட்டனர்.
அப்போது அவர், சுதந்திர காற்றை அனுபவிப்பதில் சந்தோஷம். 105 நாட்கள் என்னை சிறையில் வைத்த பிறகும் கூட, என் மீது ஒரு குற்றச்சாட்டு கூட உறுதியாக பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், நாளை(டிச.5) பேட்டியளிப்பதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவர் மாநிலங்களவைக்கு சென்று கலந்து கொள்வார் என்று கார்த்திசிதம்பரம் கூறியுள்ளார்.