திமுகவில் இணைந்தார் பாஜக துணை தலைவர்.. பாஜகவினர் அதிர்ச்சி..
திருமண விழாவில் ஸ்டாலினை புகழ்ந்த பாஜக துணை தலைவர் அரசகுமார் இன்று திமுகவில் சேர்ந்தார்.
புதுக்கோட்டையில் டிச.1ம் தேதி திமுக பிரமுகர் பெரியண்ணன் இல்லத் திருமண விழா நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார். இதில், பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி.அரசக்குமார் கலந்து கொண்டு பேசும் போது, உள்ளாட்சிகளில் நல்லாட்சி கொடுத்து நாயகனாக வீற்றிருக்கும் என்றைக்கும் எங்களுக்கும் நிரந்த தலைவராக உள்ள அன்புத் தளபதியே... என்று ஸ்டாலினை புகழ்ந்தார்.
மேலும், எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின். அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகி இருக்க முடியும். ஆனால் அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். ஸ்டாலின் முதலமைச்சராகும் காலம் கட்டாயம் வரும் என பேசினார்.
இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. மேலும், அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்பது பாஜகவினருக்கே தெரிந்து விட்டது என்று திமுகவினர் பேசினர். இதைத் தொடர்ந்து, பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமார் அவசரமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், தான் யதார்த்தமாக பேசினேன் என்றும் அது பாஜகவின் கருத்து அல்லது என்றும் நீண்ட விளக்கம் அளித்தார். ஆனாலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு மாநில பாஜக பரிந்துரை செய்தது. அவர் ஊடகங்களில் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலையில் பி.டி.அரசகுமார் தனது ஆதரவாளர்களுடன் அறிவாலயத்திற்கு சென்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார்.
ஸ்டாலினை புகழ்ந்த போதே அரசகுமாரை பாஜகவினர் சமூக ஊடகங்களில் வறுத்தெடுத்தனர். இப்போது பாஜக துணை தலைவர் பதவியில் இருந்த ஒருவரே அக்கட்சியை பிடிக்காமல் திமுகவில் சேர்ந்து விட்டார் என்று செய்தி வெளியானதால், அது பாஜகவினருக்கு மேலும் கோபத்தை கிளறி விட்டிருக்கிறது. அதேசமயம், திமுகவினர் இதையே வாய்ப்பாக பயன்படுத்தி, பாஜகவில் திராவிட உணர்வாளர்கள் யாரும் இருக்கவே முடியாது என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.