தஞ்சையில் சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ்..
தஞ்சாவூரில் சசிகலாவுக்கு சொந்தமான வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா, ஜெயலலிதா மீதான சொத்து வழக்கில் தண்டனை பெற்று தற்போது பெங்களூரு சிறையில் இருக்கிறார். இவருக்கு சொந்தமான வீடு, தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ளது. சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட இந்த வீடு மிகவும் பழைய கட்டடமாக உள்ளது. இங்கு மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென இங்கு வந்து கட்டடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், இங்கு வசிக்க முடியாத அளவுக்கு கட்டடம் மோசமாக இருப்பதால் இதை இடிக்க வேண்டும் என்று கூறி, வீட்டின் உரிமையாளர் சசிகலா மற்றும் மனோகருக்கு கடந்த செப்டம்பரில் நோட்டீஸ் அனுப்பினர். மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் இதை அனுப்பினார்.
அதில், இந்த பழைய கட்டடத்தை பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களுக்கும், இங்கு வசிப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படாதவாறு உடனே இதை இடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், 15 நாட்களுக்குள் கட்டடத்தை இடிக்காவிட்டால் மாகராட்சியே கட்டடத்தை இடித்து, செலவு தொகை அனைத்தும் தங்களிடம் இருந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தஞ்சாவூர் தாசில்தார் வெங்கடேசன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சசிகலா வீட்டிற்கு வந்தனர். அங்கிருந்த மனோகரிடம் ஏற்கனவே அளித்த நோட்டீஸ் பற்றி விளக்கம் கேட்டனர்.
அதற்கு மனோகர், சென்னையில் உள்ள சசிகலாவின் உறவினருக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும், இந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். தானும் பின்பகுதியில் உள்ள வீட்டில் குடியிருப்பதாக கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அதில், இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால் கட்டடத்தின் உள்புறம் செல்லக்கூடாது. யாரும் இதை பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது.சசிகலா வீட்டை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் தஞ்சாவூரில்் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.