கிராம ஊராட்சி வார்டு இடஒதுக்கீடு விவரம் எங்கே? சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி

உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடாதது ஏன் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. கிராம ஊராட்சி வார்டு ஒதுக்கீடு விவரங்கள் அரசிதழிலும் தெளிவாக இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊரக உள்ளாட்சிகளுக்கான அனைத்து இடஒதுக்கீட்டு விவரங்களையும் அரசிதழில்(கெசட்) கடந்த மே மாதம் 20, 21, 29ம் தேதிகளில் வெளியிட்டு விட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஊடக விவாதங்களிலும் ஆளுங்கட்சியினர் அந்த விவரங்கள் அரசிதழில் உள்ளது என்று ஆணித்தரமாகப் பேசுகின்றனர்.

அரசிதழில் பார்த்தால், சென்னை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து போன்றவற்றிற்கான இடஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கிராம ஊராட்சி வார்டு இட ஒதுக்கீடு விவரங்கள் இல்லை. அந்த வார்டுகளுக்கான இடஒதுக்கீட்டு விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது என்று உச்சநீதிமன்றத்தில் பொய் சொல்கிறாரா ஆணையர்? அல்லது அரசிதழில் யாருக்கும் தெரியாத இடத்தில் வெளியிட்டு ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா?

இந்த விவரங்கள் எல்லாம் எளிமையாகப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலேயே ஏற்றப்பட்டிருக்க வேண்டும். கிராமத்திலுள்ள எத்தனை பேரால் அரசிதழ் பக்கத்திற்குச் சென்று தேடி இந்த விவரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்? யாருக்காக இயங்குகிறது ஆணையம்?

நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் இன்றுவரை இடஒதுக்கீடு விவரங்கள் வெளிப்படையாக இல்லை. இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் விளக்கமளிக்க வேண்டும். செய்தியாளர்கள் அவரிடம் 2 கேள்விகளை எழுப்ப வேண்டும். 1. ஊராட்சி வார்டு இடஒதுக்கீடு விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதா? எப்போது, எந்த பக்கத்தில்?

2. கிராம ஊராட்சி வார்டு இடஒதுக்கீடு விவரங்கள் உட்பட அனைத்து இட ஒதுக்கீட்டு விவரங்களும் ஏன் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஏற்றப்படவில்லை?இவ்வாறு செந்தில் ஆறுமுகம் கூறியுள்ளார்.

More News >>