9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்..

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை மற்றும் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டிய தருணத்தில் இந்த மாவட்டங்களை அவசரமாக பிரித்தது ஏன்? இதற்கு எப்படி மறுவரையறை செய்யப் போகிறீர்கள்? என்று திமுக கேள்வி எழுப்பியது. மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்கம் தராததால், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது.

இதற்கு பின், பழைய மாவட்டங்களின் அடிப்படையில்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும் போது, கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் செய்யப்பட்டு விட்டன. எனவே, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போதுதான் புதிய மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை செய்ய முடியும் என்று கூறப்பட்டது.

திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மறுவரையறை பணிகள் துவங்கிய போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படவில்லை. அதற்கு பிறகு அவசரமாக மாவட்டங்களை பிரித்துள்ளனர். புதிய மாவட்டங்கள் பிரித்ததால் வரையறை செய்யாமல் தேர்தல் நடத்த முடியாது. அப்படி நடத்தினால் குழப்பம் வரும் என்றார். அதற்கு தமிழக அரசின் வழக்கறிஞர், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு, அதை தள்ளி வைக்க முடியாது என்று வாதாடினார்.

இதற்கு நீதிபதிகள், நாங்கள் நினைத்தால் தேர்தலை எங்களால் தள்ளிப்போட முடியும். நாடாளுமன்றம் வகுத்த சட்டவிதிகளின்படி தேர்தலை நடத்தாவிட்டால் அதை ரத்து செய்யலாம். குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது. மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்டப் பஞ்சாயத்து எப்படி சாத்தியமாகும்? என்று கூறினர். தொடர்ந்து சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைத்தால் என்ன? என்று கேட்டனர். அதற்கு திமுக தரப்பில், அப்படி நடத்தினால் தேவையற்ற குழப்பம் ஏற்படும். ஒட்டுமொத்த தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று வாதாடப்பட்டது.

அதன்பின்னர், மாநில தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள், புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாமா? அதில் என்ன பிரச்னை? என்று பிற்பகல் 2 மணிக்குள் பதிலளிக்கும்படி கூறினர். இதன்பின், பிற்பகல் நீதிமன்றம் கூடிய போது, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க தயாராக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி அளித்தனர். இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாது. மற்ற மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி வார்டுகளுக்கு நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

More News >>