ஊழலை அம்பலப்படுத்திய 15 ஊடவியலாளர்கள் படுகொலை - அதிர்ச்சி தகவல்
கடந்த 6 ஆண்டுகளில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஊழலை அம்பலப்படுத்திய 15 ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
ஊடக சுதந்திரம் மற்றும் ஊழல் குறித்து ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் அமைப்பு 180 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது.
பூஜ்ஜியம் முதல் 100 வரை மதிப்பெண் அடிப்படையில் ஊழல் நாடுகளில் பட்டியல் கணக்கிடப்படுகிறது. பூஜ்ஜியம் மதிப்பெண் பெறும் நாடு மிகவும் மோசமாக ஊழலுல் சிக்கியுள்ள நாடு 100 மதிப்பெண் பெறும் நாடு ஊழலற்ற நாடு.
பொதுத்துறை நிறுவனங்களில் நிலவும் ஊழலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 180 நாடுகளை கணக்கில் கொண்டது இந்த அமைப்பு. ஊழலற்ற நாடுகளில் 89 மதிப்பெண்களுடன் நியூசிலாந்து முதலிடத்திலும், 88 மதிப்பெண்களுடன் டென்மார்க் இரண்டாம் இடத்திலும், 85 மதிப்பெண்களுடன் ஃபின்லாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இந்த மதிப்பெண் பட்டியலில் கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 79-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 40 மதிப்பெண் பெற்று 81-வது இடத்தில் உள்ளது. இந்தியாவைவிட அதிக மதிப்பெண் பெற்று சீனா 77-வது இடத்தில் உள்ளது.
இது தொடர்பாக கூறியுள்ள ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு, “45க்கும் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள நாடுகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் 9 முதல் 10 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவு ஆகிய நாடுகளில் மேற்கூறிய தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில், இந்த நாடுகளில் ஊழலை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.