எரிக்கப்பட்ட உன்னாவ் பெண்.. டெல்லி மருத்துவமனையில் சாவு..

உன்னாவ் நகரில் பாலியல் கொடுமைக்குள்ளாகி, சாட்சியளிக்கச் சென்ற போது குற்றவாளிகளில் தீ வைக்கப்பட்ட இளம் பெண் நேற்றிரவு(டிச.6) இறந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை, கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டு பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இரண்டு பேரில் ஒருவா் தப்பி விட்டாா். மற்றொருவா் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதற்கு பிறகு கடந்த வியாழன்று அந்தப் பெண், பாலியல் பலாத்கார வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றத்துக்கு சென்றார்.

அவர் கவுரா சந்திப்பில் சென்றபோது, பலாத்கார குற்றவாளிகளான சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி மற்றும் அவர்களுடன் ஹரிசங்கர், உமேஷ் பாஜ்பாய், ராம்கிஷோர் ஆகிய 3 பேர் சேர்ந்து அங்குவந்து அவரை வழிமறித்தனர். பலாத்கார வழக்கில் சாட்சியளிக்கக் கூடாது என்று அவர்கள் மிரட்டினர்.

ஆனால், அந்த பெண் துணிச்சலாக அதற்கு மறுப்பு தெரிவித்தார். உடனே ஆத்திரமடைந்த அந்த 5 பேரும் அந்த பெண்ணின் மீது தீ வைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண்ணை, காவல்துறையினர் மீட்டு லக்னோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அங்கிருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் அவரை டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்றிரவு 11.10 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இரவு 11.40 மணிக்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்போது உ.பி.யில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அந்த பெண்ணின் குடும்பத்தினர் தங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக புகார் கூறியிருந்தனர். இதற்காக அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், பெண்ணின் உறவினர்களை சிலர் தொடர்பு ெகாண்டு, அவர்களின் கடைகளை எரித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால், அங்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

More News >>