ஜார்கண்டில் 2வது கட்ட வாக்குப்பதிவு மும்முரம்.. முதல்வர் வாக்களிப்பு..
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்வர் ரகுபர்தாஸ் தனது ஜாம்ஷெட்பூர் தொகுதியில் வாக்களித்தார்.
ஜார்கண்டில் 5 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக, கடந்த நவ.30ம் தேதியன்று சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேகர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் முதல்வர் தொகுதியும் அடங்கும். ஆளும் பாஜக முதல்வர் ரகுபர்தாஸ் தனது ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் வாக்களித்தார். பின்னர், அவர் கூறுகையில் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றார். அவரது தொகுதியில் முன்னாள் அமைச்சர் சர்யூராய் அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவது அவருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.மேலும், ரமேஷ்சிங் முண்டா ெகாலை வழக்கில் சிறையில் இருக்கும் ராஜா பீட்டர், சரணடைந்த மாவோ தீவிரவாதி குன்டன் பகான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஜார்க்கண்டில் ஆளும் பாரதீய ஜனதா முதல் முறையாக கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு எதிராக ஜார்கண்ட் முக்திமோர்ச்சா(ஜே.எம்.எம்) கூட்டணி போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.