போலீஸ் என்கவுன்டர்.. மனித உரிமை கமிஷன் குழு ஐதராபாத் வந்தது..
பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் கொன்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மனித உரிமை கமிஷன் குழு, ஐதராபாத் வந்துள்ளது.
ஐதராபாத் புறநகரில் கடந்த நவம்பர் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) 4 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்வம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள், திரையுலகினர் என்று பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுப்பினர். குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கக் கோரி, ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணிகளை நடத்தினர்.
இந்நிலையில், பலாத்காரம் மற்றும் எரிப்பு சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப், சிவா, சென்னகேசவலு, நவீன் ஆகிய 4 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். அவர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் நேற்று(டிச.6) அதிகாலையில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ேபாலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாகவும், அதனால் என்கவுன்டரில் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.
இந்த என்கவுன்டரை பலரும் வரவேற்று, ஐதராபாத் ேபாலீசாரை பாராட்டினர். அதே சமயம், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரின் செயல் அராஜகமானது, வேகமாக வழக்கை நடத்தி நீதிமன்றம் மூலம்தான் தண்டனை பெற்று தந்திருக்க வேண்டுமென்று அவர்கள் வாதாடினர்.
மேலும், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட 15 பெண்கள், அந்த என்கவுன்டருக்கு எதிராக தெலங்கானா ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், என்கவுன்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களை தகனம் செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், பிரேதப் பரிசோதனையை முறையாக செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய மனித உரிமை கமிஷனில் இருந்து ஒரு குழு இன்று ஐதராபாத்திற்கு வந்துள்ளது. போலீஸ் என்கவுன்டர் நடந்த இடத்தை ஆய்வு செய்து, அந்த சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளனவா? என்று அந்தக் குழுவினர் விசாரிக்க உள்ளனர்.